சாதிவாரி கணக்கெடுப்பில் அரசு சாதி பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 சென்னை (Chennai):

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பொதுமக்கள் தங்களது சாதியை நேரடியாக எழுதும் முறைக்கு பதிலாக, அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 16 மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதி விவரத்தை மக்கள் தாங்களே எழுதும் முறை பின்பற்றப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை தொடர்ந்தால், ஒரே சாதி பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதுடன், கணக்கெடுப்பின் துல்லியமும் நோக்கமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பில், அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலில் இடம்பெற்ற பெயர்களில் இருந்து மக்கள் தேர்வு செய்யும் முறை பின்பற்றப்பட்டதால் துல்லியமான தரவுகள் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நடைமுறையை நாடு முழுவதும் நடைபெறும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் பின்பற்ற வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கணக்கெடுப்பு அலுவலர்கள் அரசின் சாதி பட்டியலைக் காட்டி, அதிலிருந்து சம்பந்தப்பட்ட சாதி மற்றும் அதன் குறியீட்டு எண்ணை பதிவு செய்யும் முறையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சாதி விவரங்களை சுதந்திரமாக எழுத அனுமதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தி, கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும் என்பதால், ஒரே மாதிரியான தரவுகளை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ பட்டியல் முறை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous Next

نموذج الاتصال