சென்னை: தமிழகத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 744-ல் 36 கி.மீ. நீளமுள்ள வடுகப்பட்டி–தெற்கு வெங்கநல்லூர் நான்கு வழிச்சாலையையும், தேசிய நெடுஞ்சாலை 744ஏ-ல் 30 கி.மீ. நீளமுள்ள மதுரை சுற்றுச்சாலையையும் திறந்து வைத்தார். நாகப்பட்டினம்–தஞ்சாவூர் பிரிவில் திருவாரூர் நான்கு வழிப் புறவழிச்சாலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
ரூ.750 கோடி மதிப்பிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக காரைக்கால்–பேரளம் ரயில் பாதை மற்றும் கோவை சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்ட மூன்று ரயில்வே மேம்பாலங்களைத் திறந்து வைத்தார். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்டமைப்புத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை ஐஐடியில் அமைந்துள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். மாநிலங்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாம் புரிந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை ரூ.17,000 கோடியில் உலகத் தரம் வாய்ந்த பெரிய சரக்குப் பெட்டக மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்கல், கடற்பாசி பூங்கா மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கும் மத்திய அரசு உதவி வருவதாகக் கூறினார்.
விவசாயிகளுக்கான கடன் அட்டை வசதி மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கு மத்திய அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்றும், வளர்ச்சியடைந்த தமிழகத்தின் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேகர், மத்திய அமைச்சர் மனோகர் லால், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் என். ஆனந்த், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
