சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பொது அறிவை விரிவுபடுத்தவும், கேள்வி கேட்கும் திறனை வளர்க்கவும் ‘சொல்! வெல்!’ என்ற புதிய அடையாளத்துடன் விநாடி-வினா மன்றங்களைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களைத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) ந. லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் விநாடி-வினா மன்றங்களைப் புதிய அடையாளத்துடன் வலுப்படுத்தி, மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்துவது, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, பல்வேறு தகவல்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கும் திறனை உருவாக்குவது ஆகியவை இம்மன்றத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தச் செயல்பாடுகள் விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்கும் சில மாணவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கேள்வி கேட்கவும், கற்றுக்கொள்ளவும், சிந்திக்கவும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காகத் தரப்படுத்தப்பட்ட கற்றல் வளங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பான எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பொறுப்பான ஆசிரியர்கள் இந்த வளங்களைப் பதிவிறக்கம் செய்து, விநாடி-வினா மன்றத்துக்கான பாடவேளையில் பயன்படுத்த வேண்டும்.
மேலும், பல்வேறு வகையான கேள்விகள், போட்டிகளை நடத்தும் முறைகள் மற்றும் போட்டியின் சுற்றுகள் குறித்து மாணவர்களுக்குப் பள்ளி நிலையிலேயே பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்கும்போது மாணவர்களுக்கு கேள்வி வடிவங்களும் போட்டிச் சுற்றுகளும் புதிதாக இருக்காது. போட்டிக்கான பயிற்சியைத் தாண்டி, கேள்வி கேட்கும் மற்றும் சிந்திக்கும் திறன் கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்கும் கற்றல் தளமாக இம்மன்றங்கள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
