லக்னோவில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் முன்பகுதி சேதம்


 பாட்னாவில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தின் முன்பகுதி, லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. மோசமான வானிலையின்போது மின்னல் தாக்கியிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.


இண்டிகோவின் 6E925 விமானம் புதன்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் பாட்னாவில் இருந்து புறப்பட்டது. லக்னோவில் மாலை 4.12 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 4 மணியளவில் விமானம் வழக்கம்போல் தரையிறங்கியது.


விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 110 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


விமானம் ஓடுபாதையை விட்டு குறிப்பிட்ட நிறுத்துமிடத்துக்குச் சென்ற பின்னரே அதன் முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் விமான நிலையக் குழுவினரால் கண்டறியப்பட்டது.


மோசமான வானிலை காரணமாக விமானம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதா என்பது குறித்து முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. விமானத்தின் முன்பகுதியில் உள்ள வானிலை ரேடாரை பாதுகாக்கும் ரேடோம் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் இயக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் பயணம் செய்தவர்கள் தொடர்ந்து செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேவையான தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் உரிய அனுமதிகள் பெறப்பட்ட பின்னரே சேதமடைந்த விமானம் மீண்டும் இயக்கப்படும்.

Previous Next

نموذج الاتصال