புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து வகைகளையும் சேர்ந்த 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.690 மதிப்பிலான தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து தலைமையில் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ராஜசேகரன், எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மக்கள் பிரதிநிதிகள், துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்றும், ஈமச்சடங்கு நிதியுதவி கோரி அளிக்கப்பட்ட 157 விண்ணப்பங்களுக்கு இன்னும் நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவக்கொழுந்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தீபாவளி பரிசுத் தொகுப்பில் தலா 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ மைதா மற்றும் அரை கிலோ ரவை ஆகியவை இடம்பெறும். இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
