தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 10-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), காக்ரோச் ஜனதா கட்சி (CJP), அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் (ASAP) ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.
தேர்தல் அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 2025 நிலவரப்படி இருந்த வாக்காளர் பட்டியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வர விரும்புவோர் ரயில், விமானம் அல்லது பிற போக்குவரத்து வசதிகளில் முன்பதிவு செய்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பாக டெல்லி போலீஸாரிடம் அக்டோபர் 10-ம் தேதிக்கான தகவல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அதைப் பெற்றுக்கொண்டதுடன், போராட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உறுதிமொழியும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முன்னதாக அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அனுமதி வழங்கப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
