உலகின் நம்பகமான உற்பத்தி மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி


 டெல்லியில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2026 மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 300 சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.


நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் புதிய மற்றும் நம்பகமான உற்பத்தி மையங்களை எதிர்பார்க்கும் நிலையில், அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா தொடர்ந்து தயாராகி வருவதாக தெரிவித்தார்.


உலகளாவிய உற்பத்தித் துறையின் புதிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நம்பகமான இடமாக இந்தியா மாறி வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதுடன், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், டிரான்சிஸ்டர் அளவை மட்டும் கவனிக்காமல், நினைவக அமைப்பு மற்றும் வெப்ப மேலாண்மை உள்ளிட்ட முழுமையான ஒருங்கிணைந்த அமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.


உலகளாவிய சவால்களுக்கு இடையிலும் இந்தியா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் செமிகண்டக்டர் கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதால், கண்டுபிடிப்புகள், முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறினார்.


இந்தியாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளம் திறமையாளர்களும், வெளிநாடுகளில் உள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இணைய வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.


கண்காட்சியில் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கான தனி அரங்குகளும், 12 இந்திய மாநிலங்களின் அரங்குகளும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன.

Previous Next

نموذج الاتصال