அஞ்செட்டியில் விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட கோரிக்கை

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி ஊராட்சி பூக்சோலை கிராமத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வசித்து வரும் விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், அஞ்செட்டி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில், அஞ்செட்டி ஊராட்சி கிழக்கு பகுதியில் உள்ள சர்வே எண்கள் 560 மற்றும் 559/3 ஆகியவற்றில் 29 குடும்பங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்தும், வீடுகள் கட்டியும் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் 1989-ம் ஆண்டு தடையாணை எண் 1168 காரணமாக அஞ்செட்டி வட்டத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் ஏராளமான குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போது அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கான வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்காக குறிப்பிட்ட சர்வே எண்களில் வசித்து வரும் விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்றவும், வீடுகளை அகற்றவும் வருவாய்த் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


இதனால் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


அஞ்செட்டி மேற்கு வருவாய் கிராமத்தில் சாலை வசதியுடன் சுமார் 12 ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும், விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத மாற்று நிலத்தைத் தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், சர்வே எண்கள் 559/3 மற்றும் 560-ல் குடியிருக்கும் விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதுடன், 1989-ம் ஆண்டு தடையாணை எண் 1168-ஐ நீக்கி விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Previous Next

نموذج الاتصال