சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கொன்னையார் கிராமத்தில் செப்டம்பர் 3-ம் தேதி மாலை இந்த சோக சம்பவம் நடைபெற்றது.
அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபிதா (19), பள்ளியில் படித்து வந்த தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13) மற்றும் அவர்களது பள்ளித் தோழி அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த இருசக்கர வாகனம் தனியார் கல்லூரிப் பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்லூரி மாணவி சுபிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
4 மாணவிகளின் உயிரிழப்பு குறித்து அறிந்த முதல்வர் விஜய், மிகுந்த வருத்தமும் வேதனையும் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த முதல்வர், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
