வட அரபிக்கடலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி மாலை, சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல் ஒன்று வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் கடற்படையின் PNS Hunain என்ற கப்பல் அதிவேகமாக இந்திய போர்க்கப்பலை நெருங்கியதாகவும், பாதுகாப்பான முறையில் கப்பலைத் திருப்ப முடியாததால் லேசான மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஓமன் வளைகுடாவில் இருந்து சுமார் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் வட அரபிக்கடலில் நடைபெற்றுள்ளது. மோதலில் பாகிஸ்தான் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், இந்திய போர்க்கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் தொடர்ந்து தனது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் கடற்படைப் பிரிவின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை எனக் குறிப்பிட்டு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் சர்வதேச கடற்பகுதியில் ஒன்றுக்கொன்று குறைந்தது 3 நாட்டிக்கல் மைல் தூரத்தைப் பேண வேண்டும் என்ற 1991-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதேபோன்ற எதிர்ப்பை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடமும் பதிவு செய்ய இந்தியா உத்தரவிட்டுள்ளது.
