‘டேப்ஸ்’ இடைக்கால நிவாரணம் ரூ.10 ஆயிரம்: அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

தமிழக அரசுப் பணியில் 10 முதல் 18 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமான ‘டேப்ஸ்’ திட்டத்தில் இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்குரிய அகவிலைப்படி வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கணக்கிடுவது தொடர்பாக நிதித்துறை செலவினத் துறை செயலர் என்.வெங்கடேஷ், கருவூலக் கணக்குத் துறை இயக்குநருக்கு செப்டம்பர் 11-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 10 ஆண்டுகளுக்கு மேல் 18 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரமும் அதற்குரிய அகவிலைப்படியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேப்ஸ் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் வெளியிடப்பட்ட பிறகு, தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அனுமதிக்கப்படும் தொகை கணக்கிடப்பட்டு, அதற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசம் நிலுவைத்தொகையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகை அகவிலைப்படியுடன் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.

18 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு ஏற்கெனவே 30 சதவீத அடிப்படையில் கூடுதல் தொகை வழங்கப்பட்டிருந்தால், அந்த கூடுதல் தொகை செப்டம்பர் முதல் 10 தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறைந்தபட்ச பணிக்காலமாக 18 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதையும், ஏற்கெனவே வழங்கப்பட்ட கூடுதல் தொகையை பிடித்தம் செய்யும் முடிவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

டேப்ஸ் திட்டத்தின் முழுமையான விதிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், செப்டம்பர் 11-ம் தேதி நிதித்துறை வெளியிட்ட கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
 

Previous Next

نموذج الاتصال