காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பதை தடுக்க கோரிக்கை


 சென்னை: காசிமேடு மற்றும் எண்ணூர் கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ள நிலையில், சென்னை மாநகரின் பெரும்பாலான சிலைகள் வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதிக்கு கொண்டு வரப்படும் சூழல் உருவாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காசிமேடு மற்றும் எண்ணூர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிலைகளை கடலில் கரைத்தால் கடல் நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் பகுதிகள் லட்சக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையவை என்றும், சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர் அவற்றில் பயன்படுத்தப்படும் மரச்சட்டங்கள், மூங்கில் மற்றும் இரும்புக் கம்பிகள் கடற்கரை மற்றும் கடலில் தேங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்த கழிவுகள் மீன்பிடி படகுகளில் மோதி சேதத்தை ஏற்படுத்துவதுடன், மீன்பிடி வலைகளையும் கிழித்து சேதப்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களால் கடல் வளமும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால் காசிமேடு மற்றும் எண்ணூர் கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கு மாற்றாக செயற்கை நீர்த்தேக்கங்கள் அல்லது குளங்களை அமைத்து, அங்கு மட்டும் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தவிர்க்க முடியாத சூழலில் கடலில் சிலைகளை கரைக்க அனுமதித்தால், கரைக்கப்பட்ட சிலைகளின் கழிவுகளை 24 மணி நேரத்துக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال