புதுடெல்லி: இந்தியாவும் வியட்நாமும் பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வியட்நாம் வெளியுறவு அமைச்சர் லே ஹோய் ட்ரங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு அமைச்சர்களும் 19-வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்துக்கு இணைத் தலைமை வகித்தனர்.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது, பாதுகாப்பு உற்பத்தியில் இணைந்து செயல்படுவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்தியா-வியட்நாம் மேம்படுத்தப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத் தூண்களில் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பும் ஒன்றாக உள்ளது. இரு நாடுகளின் முப்படைகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புகளும் விரிவடைந்துள்ளன.
2023 ஜூலை மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கொர்வெட் ஐஎன்எஸ் கிர்பனை வியட்நாமுக்கு இந்தியா வழங்கியது. இதற்கு முன்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 12 அதிவேக பாதுகாப்புப் படகுகள் 2022 ஜூனில் வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டன.
2024 ஜூலையில் இந்தியாவின் எக்ஸிம் வங்கிக்கும் வியட்நாம் நிதி அமைச்சகத்துக்கும் இடையே 120 மில்லியன் மற்றும் 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மேலும் இரண்டு கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடல் மற்றும் வேளாண் பொருட்கள், மருந்துகள், நிதி, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்பு, அணுசக்தி, விண்வெளி, கடல்சார் துறைக்கான தரநிலைகள் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
இந்தியா-வியட்நாம் தூதரக உறவுகளின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அடுத்த ஆண்டை இரு நாடுகளின் நட்புறவு ஆண்டாகக் கடைப்பிடிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
