கேரள முதல்வர் வி.டி.சதீசனின் இரண்டாவது திருமணம் தொடர்பானதாகக் கூறப்படும் ஆவண விவகாரத்தில், செய்தி தொலைக்காட்சி நிர்வாகி அன்டோ ஆகஸ்டின் உள்ளிட்ட 3 பேர் மீது திருவனந்தபுரம் நகர சைபர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜு பி. நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்டோ ஆகஸ்டின் முதல் குற்றவாளியாகவும், அடையாளம் தெரியாத இருவர் மற்ற குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்டோ ஆகஸ்டின், இரண்டு பேர் தன்னை அணுகி, கர்நாடக மாநிலம் பைந்தூரில் 2012-ம் ஆண்டு வி.டி.சதீசன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கூறியதாக தெரிவித்திருந்தார்.
அந்த நபர்கள் திருமணச் சான்றிதழ் மற்றும் திருமணப் பதிவு தொடர்பான கட்டாய அறிவிப்பு ஆவணம் எனக் கூறப்படும் ஆவணங்களை தன்னிடம் வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்திருந்தும் அவற்றை தன்னிடம் வைத்திருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்தல், பொது ஆவணங்களை போலியாக உருவாக்குதல், குற்றச் சதி, அவதூறு பரப்புதல் மற்றும் போலி ஆவணங்களை உண்மையானவை எனப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களை அடையாளம் காண்பதற்காக கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அன்டோ ஆகஸ்டின் மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனத்துக்கு எதிரான மற்றொரு மோசடி வழக்கில், கேரள போலீஸாரின் சிறப்பு விசாரணைக் குழு பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
