ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் செப்டம்பர் 8-ம் தேதி மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்களில் 3 பேருக்கு ரத்தசோகை இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஒரு குட்டிக்கு கடுமையான ரத்தசோகையும், இரு குட்டிகளுக்கு லேசான ரத்தசோகையும் இருப்பது கண்டறியப்பட்டது.
மைசூர் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிபுணர் அடங்கிய குழு, குட்டி ஒராங்குட்டான்களின் உடல்நிலையை விரிவாக ஆய்வு செய்தது.
மார்பு, வயிறு மற்றும் மண்டை ஓடு பகுதிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ரத்தம், சீரம் மற்றும் மூக்கு-தொண்டை மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. சிறுநீர் மற்றும் மல மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவுகள் முழுமையாக கிடைக்காத நிலையில், குட்டி ஒராங்குட்டான்கள் சுறுசுறுப்பாகவும் உணவு உட்கொள்ளும் நிலையிலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைப்படி, கூடுதல் ஊட்டச்சத்து வழங்கும் சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது அவை வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உடல்நிலை பரிசோதனை முடிவுகள் இயல்பாக வந்த பிறகு, அவற்றின் இனத்தையும் புவியியல் பூர்வீகத்தையும் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 5 குட்டிகளும் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. அவை எவ்வாறு ஒடிசாவுக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பின் கொல்கத்தா மற்றும் போபால் பிரிவுகளும் விசாரணைக்கு உதவி வருகின்றன.
