சென்னை: வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது உடல்நலம் குறித்து விசாரித்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாகவும், மேலும் 2 அல்லது 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகளின் தலைவர்களும் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்தநாளையும், திமுக தொடங்கப்பட்ட நாளையும் கட்சியினர் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கட்சி அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் 78-வது ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
