டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர 2 மாத அவகாசம்


 சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை 2 மாதங்களில் முடிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.


இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த ஜூலை 22-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய பணியாளர் துறை இணைச் செயலர் சுஷீல்குமார் பாட்டீல் காணொலி வாயிலாக ஆஜரானார்.


அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் துறை அதிகாரி, வழக்கு தொடர்பான அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும், ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து பதில் கிடைத்த பிறகு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்கு இருப்பதாகவும் கூறினார்.


இதையடுத்து, கடந்த 2025 நவம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, 2 மாதங்களுக்குள் அனுமதி வழங்கும் நடைமுறையை முடித்து தமிழக அரசுக்கு தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.


வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Previous Next

نموذج الاتصال