பெரம்பூர் தொகுதி மேம்பாட்டுக்கு மாஸ்டர் பிளான் வெளியீடு


 சென்னை: வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பெரம்பூர் கண்ணதாசன் நகரில் மக்கள் கூடுகை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் தொகுதி வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் அறிக்கையை கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் வெளியிட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா அறிக்கையைப் பெற்றுக்கொண்டார்.


மாஸ்டர் பிளானில், கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை அரசு கைவிட்டு, பசுமை சென்னைக்கான முன்னெடுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மீட்கப்படும் 352 ஏக்கர் நிலத்தை வடசென்னையின் நூலகம் மற்றும் பூங்கா வசதிகளுடன் கூடிய புதிய வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வண்ணாரப்பேட்டை முதல் செங்குன்றம் வரை புதிய மெட்ரோ வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வை உடனடியாக தொடங்கவும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய உயர்மட்ட சாலை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மூலக்கடை - பெரம்பூர் இடையே மாதவரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்துதல், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு நவீன முறையில் மறுகட்டமைப்பு செய்தல், மழைநீர் கால்வாய்களை துரிதமாக தூர்வாருதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.


மேலும், ஒருங்கிணைந்த பெரம்பூர் வெள்ள பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கவும், விடுபட்ட தகுதியான குடியிருப்புகளுக்கு குடிமனைப் பட்டாக்களை வழங்கவும் கோரப்பட்டுள்ளது.


பெரம்பூர் தொகுதியின் தோற்றத்தை மாற்றி, கல்வி, அறிவியல், தொழில் துறைகளில் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்த இந்த மாஸ்டர் பிளானை அரசு செயல்படுத்த வேண்டும் என்று டி.கே.சண்முகம் வலியுறுத்தினார்.

Previous Next

نموذج الاتصال