சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம், கொடி மற்றும் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து மகளிர் கால்பந்து போட்டிக்கான டாஸை போட்டு ஆட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 16.28 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், நடப்பாண்டு இதுவரை இல்லாத அளவாக 26.38 லட்சம் வீரர், வீராங்கனைகள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.
இதில் 14.86 லட்சம் பள்ளி மாணவர்கள், 5.35 லட்சம் கல்லூரி மாணவர்கள், 5.07 லட்சம் பொதுமக்கள், 69 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் 38 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.74 லட்சம் பேரும், சென்னையில் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பதிவு செய்துள்ளனர்.
மேலும், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து சர்வதேச அரங்கில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும், வீரர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.