சென்னை: கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊக்கத்தொகை ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் தினசரி உதவித்தொகையும் ரூ.500-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் மீட்க முடியாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 லட்சம் மதிப்பில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும்.
திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் நவீன மீன் சந்தை அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் டிஜிட்டல் மின் ஏலக்கூடமும் அமைக்கப்படும்.
மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் திறனறி தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.
மீனவர் நலன், மீன்பிடித் துறைமுக வசதிகள் மற்றும் மீன்வளக் கல்வி மேம்பாட்டை மையமாகக் கொண்டு மொத்தம் 24 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
