திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு: 40 பேருக்கு வாந்தி, மயக்கம்


 திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 54 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.


இவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் நேற்று ரவா கிச்சடி மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட மாணவி ஒருவரின் தட்டில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது.


இதையடுத்து, கிச்சடி சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 40 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


மருத்துவமனையில் முழு உணவை சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 39 பேர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினர்.


5-ம் வகுப்பு மாணவி ஆதிலட்சுமி (10) மட்டும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ அருண்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல்நிலையை கேட்டறிந்தனர். தொடர்ந்து பள்ளி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


சமையலரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆட்சியர் கவிதா தெரிவித்தார். உணவு சமைக்கும்போது மூடி பயன்படுத்தவும், பரிமாறுவதற்கு முன்பு உணவை முறையாக பரிசோதிக்கவும் அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


சம்பவத்தைத் தொடர்ந்து சமையல் பணியாளர்கள் ஆர்த்தி, தனலட்சுமி ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال