கூட்டுறவு நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு


 சென்னை: பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படியை தலா 10 சதவீதம் உயர்த்த தமிழக அரசு அறிவித்துள்ளது.


சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ம. விஜய் பாலாஜி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்துக்கான அரசின் பங்களிப்பு 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும். நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகையும் 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கப்படும்.


ஆயிரம் தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும். கைத்தறித் துறையில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.


காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையமும், திருபுவனத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய வடிவமைப்பு நிலையமும் அமைக்கப்படும்.


இலவச வேட்டி-சேலை திட்டத்திலும் கைத்தறி நெசவாளர்களுக்கான கூலி உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சேலைக்கான கூலி ரூ.178.36-லிருந்து ரூ.203.86 ஆகவும், வேட்டிக்கான கூலி ரூ.151.76-லிருந்து ரூ.166.26 ஆகவும் உயர்த்தப்படும்.

Previous Next

نموذج الاتصال