நேபாளத்தில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000-ஐ எட்டக்கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நிலவரப்படி, நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி வெள்ளத்தில் 1,411 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,875 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தாலும், மனித உயிரிழப்பு 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் போன்ற அளவுக்கு மிகப்பெரியதாக இருப்பதாக ஸ்வர்ணிம் வாக்லே தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனவர்களில் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளின் ஒரு பகுதியாக டெல்லி வந்துள்ள ஸ்வர்ணிம் வாக்லே, இந்தியா வழங்கிய விரைவான மீட்பு மற்றும் நிவாரண உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
வெள்ளத்தால் நேபாளத்தின் நீர்மின் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரிசூலி ஆற்றுப் படுகையில் செயல்பாட்டில் உள்ள மற்றும் கட்டுமானத்தில் இருந்த மின் உற்பத்தித் திட்டங்களில் சுமார் 800 மெகாவாட் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் 13 நீர்மின் நிலையங்களும் ஒரு சூரிய மின் நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு மின்சாரம் வழங்கி வந்த 14 மெகாவாட் திறன் கொண்ட தேவிகாட் நீர்மின் நிலையமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி குறைபாட்டை சமாளிக்க, செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை தினமும் 18 மணி நேரம் 654 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நேபாளத்துக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
சாலை, ரயில், விமானம் மற்றும் நீர்வழி இணைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்றுள்ளது.
