சென்னை: தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைய உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மாநிலத்தில் புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2026’ நிகழ்ச்சியில், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2036-க்குள் தமிழகத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே அரசின் இலக்கு என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை அதிகாரிகளும் முதல்வருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
