ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் ஆகஸ்ட் 30 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே நடைபெற்ற மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 3 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டு, 29 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆறு மாதம், ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தண்டனைக் கைதிகளாக 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 2018 முதல் 2026 வரை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாத விசைப்படகுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும், செப்டம்பர் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.