புதுடெல்லி: வடமாநிலங்களில் ரக்ஷா பந்தன் விழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ராக்கி கட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
சகோதர, சகோதரிகளின் அன்புப் பிணைப்பை கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரக்ஷா பந்தன் விளங்குகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி மகிழ்வது வழக்கம்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு வடமாநிலங்களில் பெண்கள் பயண வசதிக்காக பல்வேறு மாநில அரசுகள் இலவச பேருந்து சேவைகளை அறிவித்தன.
பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் தருணங்களை பகிர்ந்தார். இந்த விழா அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல், யோகி ஆதித்யநாத் மற்றும் ராகுல் காந்தியுடன் பெண்கள் மற்றும் மாணவர்கள் ராக்கி கட்டிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தையொட்டி வெளியான அரசியல் தலைவர்களின் இந்தப் படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
