சென்னை: ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழகத்தின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் டோக்கன்களை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பதிவுத்துறை கூடுதல் டோக்கன்களை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் வழக்கமான 100 சாதாரண டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும்.
மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்.
