மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக-கர்நாடக எல்லையில் போராட்டம்; தமிழக பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்

 

ஓசூர் – அத்திப்பள்ளி எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; பயணிகள் மாற்று ஏற்பாடுகளில் பயணம்

ஓசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு (Mekedatu) பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், தமிழகம் – கர்நாடகா மாநில எல்லையில் இரு தரப்பினரும் அறிவித்துள்ள போராட்டங்களையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மேகேதாட்டு அணை திட்டம் தமிழகத்தின் நீர்வளத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனக் கூறி, ஜூஜூவாடி, ஓசூர் (Zuzuvadi, Hosur) அருகே கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மேகேதாட்டை நோக்கிய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூஜூவாடி உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதிகளில் தமிழக போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, கர்நாடக மாநிலத்தின் அத்திப்பள்ளி (Attibele, Karnataka) பகுதியில் கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. “மேகேதாட்டில் அணை கட்டியே தீருவோம்” என்ற முழக்கத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் இரு மாநில எல்லைகளிலும் போராட்டங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி இரு மாநில காவல்துறையினரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக ஓசூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், தமிழக எல்லை வரை நகரப் பேருந்துகளில் சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி சென்று, பின்னர் கர்நாடக பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஓசூர் – அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Previous Next

نموذج الاتصال