ராமர் கோயில் காணிக்கை விவகாரத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை உத்தரப் பிரதேச முதல்வர் கடுமையாக விமர்சித்தார்
லக்னோ: ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தை முன்னிறுத்தி கேள்வி எழுப்பும் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் மீது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1990-ஆம் ஆண்டு அயோத்தி இயக்கத்தின் போது ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை மறந்துவிட முடியாது. அப்போது கரசேவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், இன்று இந்து மதத்தின் பாதுகாவலர்கள் போல பேசுகின்றனர்” என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரம் ராம பக்தர்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. இருப்பினும், குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன் அரசு உடனடியாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டது. ராமர் கோயில் அறக்கட்டளை சுயாதீன அமைப்பாக செயல்படுகிறது; அதன் நிர்வாகத்தில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை” என்றார்.
மேலும், காணிக்கை முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்த அவர், “ஆட்சியில் இருந்தபோது மத நம்பிக்கைகளை மதிக்காதவர்கள், இன்று இந்து மதத்தின் பாதுகாவலர்கள் போல செயல்படுகின்றனர். ராமர் கோயில் காணிக்கை விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
அயோத்தி தொடர்பாகவும் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத், “பாஜக ஆட்சியில் அயோத்தியின் மத முக்கியத்துவம் மட்டுமல்லாமல், நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. அயோத்தி வளர்ச்சி, உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான முன்மாதிரியாக உள்ளது” என்றார்.