சென்னை: சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்ட தனியார் பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீஸார் தெரிவித்ததன்படி, வழக்கமான பராமரிப்பு பணிக்காக பள்ளி வேன் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, வேளச்சேரி மேம்பாலம் அருகே சென்றபோது அதன் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரமாக நிறுத்தி பாதுகாப்பாக வெளியேறினார். சில நிமிடங்களில் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ வேன் முழுவதும் பரவி, வாகனம் முழுமையாக தீக்கிரையானது.
தகவல் கிடைத்ததும் வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் வேன் முழுமையாக சேதமடைந்தது. சம்பவத்தால் வேளச்சேரி மேம்பாலம் மற்றும் அதை ஒட்டிய சாலைகளில் நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.