இடஒதுக்கீடு மற்றும் இளைஞர்கள் தொடர்பான விவாதங்களின் பின்னணியில் உருவான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party) என்ற நையாண்டி இயக்கம் சமூக வலைதளங்களில் வேகமாக கவனம் ஈர்த்து வருகிறது.
முதலில் இணைய நகைச்சுவை முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம், பின்னர் வேலைவாய்ப்பு, கல்வி, தேர்வு முறைகேடுகள், நிர்வாக வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகளை முன்வைத்து இளைஞர்களின் ஆதரவைப் பெறத் தொடங்கியது.
கரப்பான் பூச்சியை தனது அடையாளமாகக் கொண்ட இந்த இயக்கம், மீம்கள், குறும்படங்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் மூலம் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளை விமர்சித்து வருகிறது. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே அதன் சமூக வலைதள பக்கங்களுக்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த இயக்கத்தின் பெயரும், அதன் குறியீடும் இணையத்தில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளன. பலரும் நகைச்சுவை பதிவுகள் மற்றும் மீம்கள் மூலம் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், இந்த இயக்கம் தொடர்பான பதிவுகள் நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்களின் அதிருப்தி மற்றும் சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தும் புதிய இணைய இயக்கமாக இது பார்க்கப்படுகிறது.