தமிழகத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஜூலை 31 மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.
சித்தா (BSMS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (BNYS) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
BSMS, BAMS, BUMS மற்றும் BHMS படிப்புகளுக்கான சேர்க்கை நீட் (NEET UG 2026) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் தங்களது நீட் தேர்வு ஹால் டிக்கெட் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். நீட் முடிவுகள் வெளியானதும், மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமையிடமிருந்து பெறப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.
BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) படிப்பிற்கு மட்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தப் படிப்பிற்கு நீட் தேர்ச்சி தேவையில்லை.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதனைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்ப நகல்களுடன் ஜூலை 31 மாலை 5 மணிக்குள் தேர்வுக் குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மட்டும் போதுமானது என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது. :