காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு பொதுவெளியில் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கவில்லை என்றால் இந்த இயக்கம் உருவாகியிருக்காது" என்று கூறினார்.
மேலும், அந்தக் கருத்தே தன்னை இந்தியா திரும்பி இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கத் தூண்டியதாகவும், அந்தச் சம்பவம் இல்லையெனில் இளைஞர்களின் இந்தப் பெரிய மக்கள் இயக்கமும் உருவாகியிருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கு காரணமான நீதிமன்றக் கருத்து நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அந்தக் கருத்து போலி பட்டங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களை நோக்கியே கூறப்பட்டது என்றும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் அனைத்து இளைஞர்களையும் குறிவைத்து கூறப்படவில்லை என்றும் தலைமை நீதிபதி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், கல்வித்துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மாணவர் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடைபெற்ற போராட்டங்களுக்கு பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து பேசிய அபிஜீத் திப்கே, இந்த இயக்கத்தின் தொடக்கத்திற்குக் காரணமான அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.