திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் வழிபாட்டிற்கு சென்ற ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பக்தர் மணிக்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்குமார் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் மேற்கொண்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான குகை போன்ற பாதையில் தரிசனம் செய்ய நுழைந்தார். உடல் பருமன் காரணமாக அந்த இடுக்கிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கவனித்த சக பக்தர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, உடல் பருமன் அல்லது சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான குகைப் பாதையில் நுழைவதைத் தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.