சுற்றுலா தலங்கள், சந்தைகளில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

 

சென்னை: தமிழகத்தில் சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொருட்காட்சி வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் ரசாயன நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.


சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சிகளில் குழந்தைகளை கவரும் வகையில் விற்பனை செய்யப்பட்ட கலர் அப்பளங்களில் தடை செய்யப்பட்ட செயற்கை ரசாயன நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி மாதிரிகளை சேகரித்தனர்.


ஆய்வக பரிசோதனைகளில் பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செயற்கை நிறமிகள் கலந்த அப்பளம் மற்றும் வடாம் போன்ற உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய், செரிமான கோளாறுகள், வயிற்றுப் புண், குடல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் கவனச் சிதறல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து, வாராந்திர சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொருட்காட்சி வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலர் அப்பளங்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செயற்கை நிறம் கலந்த அப்பளங்களை வாங்கித் தராமல், இயற்கை முறையில் உளுந்து மற்றும் அரிசியால் தயாரிக்கப்படும் அப்பளங்களை பயன்படுத்துமாறும் உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Previous Next

نموذج الاتصال