சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒருங்கிணைந்த தரவுத்தளம்

 

31 துறைகளின் தகவல்கள் ஒரே தளத்தில்; ரூ.146.7 கோடி மதிப்பில் புதிய திட்டம்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சாலை மற்றும் போக்குவரத்து தொடர்பான பல்வேறு அரசுத் துறைகளின் தரவுகளை ஒரே ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தில் இணைக்கும் புதிய திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) உருவாக்கியுள்ளது.

சென்னை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சாலைப் பணிகள், பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குறைபாடு ஆகியவை போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, ரூ.146.7 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), குடிநீர் வாரியம், மின்வாரியம், காவல்துறை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் தரவுகள் ஒரே வலையமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தனியார் ஆலோசனை நிறுவனம் தயாரித்துள்ளது. முதற்கட்டமாக மத்திய மற்றும் பழைய சென்னை பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, பின்னர் மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை உருவாக்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், இதேபோன்ற ஒருங்கிணைந்த அமைப்பை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் சிங்கப்பூர் சென்று கள ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தரவுத்தளத்தில் நகரின் வரைபடங்கள், சாலை விவரங்கள், குடிநீர் மற்றும் மின்கம்பி இணைப்புகள், பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெறும்.

மேலும், துறைகள் மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து திட்டமிடுதல், பணிகளை கண்காணித்தல், துறைகளுக்கிடையேயான முரண்பாடுகளை முன்கூட்டியே கண்டறிதல், போக்குவரத்து காவல்துறையின் அனுமதிகளை ஒரே அமைப்பின் மூலம் பெறுதல் போன்ற வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன.

இந்த அமைப்பு தற்போது செயல்பாட்டில் உள்ள துறைகளின் தகவல் அமைப்புகளை மாற்றாது என்றும், அவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டத்தின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் ஆய்வுக்குழுவில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال