விசாகப்பட்டினம்: “எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்படலாம். ஆனால், அவற்றில் வெற்றி பெறுவது நாட்டின் மனவுறுதி, பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் வலுவான ராணுவ சக்தியால்தான் சாத்தியம்” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை கிழக்கு கடற்படை அணியில் இணைக்கும் விழாவில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“இந்த நிகழ்வு, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பையும் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையையும் வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆறு முன்னணி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் கப்பல் கட்டும் திறன், பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இதில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், மேம்பட்ட பல்நோக்கு ரேடார், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் அமைப்புகள் மற்றும் நவீன உள்நாட்டு ஆயுதத் தளவாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போர்க்கப்பல் வான், கடல் மேற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை இது மேலும் வலுப்படுத்தும்.
எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவுடன் நடைபெறலாம். ஆனால், தொழில்நுட்பம் மட்டும் போதாது. தேசப்பற்று, மனவலிமை, திறமையான ராணுவ வீரர்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகளே வெற்றியை உறுதி செய்யும். புதிய தொழில்நுட்பங்களும் பாரம்பரிய ராணுவ தளங்களும் ஒன்றுக்கொன்று துணையாக செயல்பட வேண்டும்.
இன்றைய உலகில் கடல்சார் பாதுகாப்பும் பொருளாதார பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இயற்கை பேரிடர்கள், மனிதாபிமான உதவி, கடற்கொள்ளை தடுப்பு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இந்திய கடற்படை தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.
'மாரிடைம் இந்தியா 2030' தொலைநோக்கு திட்டத்தின் கீழ் கப்பல் கட்டும் திறன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உள்நாட்டு போர்க்கப்பலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தொழில்நுட்ப புத்தாக்கத்தையும் தன்னிறைவு இந்தியா இலக்கையும் முன்னெடுத்து வருகிறது.
அடுத்த தலைமுறை பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் அனைவரும் பங்களிக்க வேண்டும்.”