சுகாதார ஆய்வாளர் நியமனங்களை ரத்து செய்து மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

 

சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான நியமனங்களை உடனடியாக ரத்து செய்து, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) மூலம் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே தேர்வின் அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது ஏற்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், அனைத்து தேர்வு மையங்களின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


மேலும், முறைகேடுகள் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நீக்கும் வகையில், கடந்த டிசம்பர் 7 அன்று நடைபெற்ற தேர்வை ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றி மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


அரசுப் பணியிலான நியமனங்களில் தகுதி, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நேர்மையாக தேர்வு எழுதிய இளைஞர்களுக்கு நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال