சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி செயல்படும் அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் இலச்சினையை பயன்படுத்தி சில தனியார் மையங்கள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய மையங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் எந்தவித அங்கீகாரமும் வழங்கவில்லை என்றும், அவை மூலம் வழங்கப்படும் கல்வி அல்லது சான்றிதழ்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்வி மையங்களில் சேருவதற்கு முன், அந்த மையம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உறுதி செய்த பிறகே சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத மையங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரிவிக்குமாறும், மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் சென்னைப் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.