சேலம்: “அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்த முதல்வர் விஜய்தான் களவாணி. அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவுக்கு சென்றவர்களுக்கு இறுதியில் அல்வா கொடுத்துவிட்டார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) விமர்சித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்றே சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே என்றும் தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், “அதிமுக - திமுக கூட்டுக் களவாணி” என்று கூறியதை சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் தனது பதவிக்கேற்ற வகையில் பேச வேண்டும் என்றார்.
மேலும், “அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்த்த முதல்வர் விஜய்தான் களவாணி. முதல்வர் பதவிக்கான பொறுப்புணர்வுடன் செயல்படாமல், நான்காம் தர பேச்சாளரைப் போல பேசி வருகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய ஆட்சியில் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எதுவும் இல்லை என்றும், “வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே உள்ளது. 60 நாட்களில் அரசு என்ன சாதித்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
“கேமராவை தாங்க மூன்று கால்கள் தேவைப்படுவது போல, இந்த அரசின் நாற்காலியிலும் ஒரு கால் இரவலாக உள்ளது. அந்த ஆதரவு விலகினால் ஆட்சி நிலைக்காது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரையில்தான் இந்த அரசு நீடிக்கும்” என்றும் அவர் விமர்சித்தார்.
அதிமுக - திமுக கூட்டணி குறித்த குற்றச்சாட்டை மறுத்த அவர், “எம்.ஜி.ஆர் கூறியபடி திமுக தீய சக்தி என்ற நிலைப்பாட்டில்தான் அதிமுக இன்றும் உள்ளது. எனது தேர்தல் பிரச்சாரங்கள் முழுவதும் திமுக அரசின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினேன்” என்றார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர்களிடமே கேட்க வேண்டும். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் தவெகவுக்கு சென்றனர். ஆனால் பெரிய அண்டாவில் அல்வா கிண்டி கொடுத்துவிட்டார் விஜய்” என்று பதிலளித்தார்.
காங்கிரஸையும் விமர்சித்த அவர், “கொள்கை கூட்டணி என்று கூறியவர்கள் இன்று பதவிக்காக சென்றுள்ளனர். இதில் கொள்கை எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “மேக்கப் மேனுக்கும் ஒரு பதவி கொடுத்து விடுவார். அரசாங்கத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகியுள்ளது” என்றும் பழனிசாமி தெரிவித்தார்.