சென்னை:
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்களது சாதியை எழுதும் முறைக்கு பதிலாக, அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதி விவரத்தை காலியாக விடப்பட்ட இடத்தில் மக்கள் தாங்களே எழுதும் முறை பின்பற்றப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறை கணக்கெடுப்பில் குழப்பங்களையும், ஒரே சாதிக்கு பல்வேறு பெயர்களில் பதிவுகள் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கக்கூடும் என்றும், இதனால் கணக்கெடுப்பின் நோக்கம் பாதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பில், அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலில் இடம்பெற்ற பெயர்களில் இருந்து மக்கள் தேர்வு செய்யும் முறை பின்பற்றப்பட்டதால் துல்லியமான தரவுகள் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில் வீடு வீடாக நடைபெறும் கணக்கெடுப்பின்போது, அரசின் சாதி பட்டியலைக் காட்டி, அதிலிருந்து உரிய சாதி மற்றும் அதன் குறியீட்டு எண்ணை பதிவு செய்யும் நடைமுறையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கடைபிடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
