நள்ளிரவில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சாலை துண்டிப்பு: செங்கல்பட்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

 

செங்கல்பட்டு:


செங்கல்பட்டு அருகே ரயில்வே கேட் நள்ளிரவில் நிரந்தரமாக மூடப்பட்டதால் கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ரயில்வே மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக ரயில்வே கேட் மூடப்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை பயன்படுத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.


மாற்று சாலை வசதி அல்லது மேம்பாலம் அமைக்காமல் ரயில்வே கேட்டை மூடியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்படுத்தி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


போராட்டம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் கோரிக்கையை எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Previous Next

نموذج الاتصال