ஆட்டோ கட்டணத்தில் மாற்றம் விரைவில்: புதிய மீட்டர் கட்டண அறிவிப்பு வெளியாகிறது – போக்குவரத்துத் துறை அமைச்சர்

 சென்னை (Chennai), தமிழ்நாடு (Tamil Nadu):

தமிழகத்தில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு புதிய மீட்டர் கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 13 ஆண்டுகளாக கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாததால், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஆணையர், பல்வேறு ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.60-இல் இருந்து ரூ.70 ஆக உயர்த்தவும், அதன்பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30 வரை கட்டணம் நிர்ணயிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், செயலி (App) வழியாக இயங்கும் வாடகை வாகன சேவைகளை ஒழுங்குபடுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

மறுபுறம், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீட்டர் பயன்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பொதுமக்கள் தொடர்புடைய முக்கிய விவகாரம் என்பதால், முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு புதிய ஆட்டோ கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.


Previous Next

نموذج الاتصال