சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகளின் நீண்டகால கோரிக்கை மற்றும் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் நிலையங்களில் நிலவும் நெரிசலைக் குறைப்பதுடன், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதிகள், நடைமேடைகள், பயணிகள் சேவைகள் மற்றும் ரயில்வே இயக்கத் திட்டங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்ட பின்னர், தாம்பரத்தில் இருந்து பல்வேறு விரைவு ரயில்களின் சேவைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை மாநகரின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் பயணிகள், எழும்பூர் அல்லது சென்ட்ரல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைந்து, நேரமும் பயணச் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த விரைவு ரயில்கள், எந்த தேதியிலிருந்து தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்பது குறித்து தெற்கு ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.