தேர்தல் இலவசங்கள் வழக்கு: அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

புதுடெல்லி: தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் இலவச வாக்குறுதிகள் தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என கோரியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இலவச அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைக்கும் யோசனையையும் முன்வைத்திருந்தது.


மேலும், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச வாக்குறுதிகளை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், மக்கள் நலத் திட்டங்களையும் தேர்தல் இலவசங்களையும் ஒன்றாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் முன்பு கருத்து தெரிவித்திருந்தது.


இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், அதை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் கோரிக்கை விடுத்தார்.


இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், தற்போது பல முக்கிய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும், பின்னர் உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


மேலும், இலவச வாக்குறுதிகள் குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Previous Next

نموذج الاتصال