சென்னை: சென்னை அடையாறு, அருணாச்சலபுரம் மெயின் ரோடு (Adyar, Chennai) பகுதியில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு, ஆனந்த் ஜெய்ராம் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அகிலா மற்றும் அவரது கணவர் சண்முகசுந்தரம் (55) ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
வழக்கில் அகிலா தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், சண்முகசுந்தரம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர்.
அதன்படி, 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.