புதுடெல்லி:
கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் முக்கிய நிர்வாகியை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்துள்ளது.
முகம்மதலி கே.பி. என்ற அந்த நபர், நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்ததாகவும், வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியபோது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் அவரது இல்லத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
வழக்கில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரை கைது செய்திருப்பது விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குடன் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் சதித் திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.