சென்னை: சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் உயிரி எரிவாயு (பயோகேஸ்) ஆலையை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
கோயம்பேடு சந்தை மற்றும் உணவகங்களில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கும் இந்த ஆலை நாளொன்றுக்கு சுமார் 100 டன் உயிரிச் சிதைவு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வாகன எரிபொருள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக வழங்கப்படுகிறது.
ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கழிவு மேலாண்மை முறை, எரிவாயு உற்பத்தித் திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீடுகளிலேயே தனித்தனியாக சேகரிக்கும் நடைமுறையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டின் பிற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை முயற்சிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.