மேட்டூர் பண்ணவாடியில் தாயகம் திரும்பாத வலசைப் பறவைகள்: பறவை ஆர்வலர்களுக்கு இனிய ஆச்சரியம்

 மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி பகுதியில் வழக்கமாக பருவகாலங்களில் மட்டுமே தங்கும் வலசைப் பறவைகள், இந்த ஆண்டு தாயகம் திரும்பாமல் தொடர்ந்து அங்கேயே காணப்படுவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் பண்ணவாடி பகுதிக்கு வலசை வருகின்றன. போதுமான நீர்வளம், இயற்கை உணவுகள் மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் இருப்பதால், அவை சில மாதங்கள் தங்கி பின்னர் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்புவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு, பொதுவாக வலசைப் பறவைகளாகக் கருதப்படும் மீசை ஆலா, மழைக்காடை மற்றும் சிற்றாலா ஆகிய பறவைகள் ஜூலை மாதத்திலும் பண்ணவாடியை விட்டு செல்லாமல் தொடர்ந்து காணப்படுகின்றன.

இந்த அரிய நிகழ்வை சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர் கழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஷாஜன் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

இனப்பெருக்கத் தோற்றத்தில் மீசை ஆலா

இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மீசை ஆலா (Bearded Reedling) பறவைகள் வழக்கமாக ஏப்ரல் மாதத்திற்குள் தங்களது வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால், தற்போது ஒரு ஜோடி மீசை ஆலாக்கள் பண்ணவாடியில் தொடர்ந்து காணப்படுகின்றன.

மேலும், இனப்பெருக்கக் காலத்தை குறிக்கும் வகையில் ஆண் பறவையின் இறகுகள் கருமை நிறத்துடன் மாறியிருப்பது, அவை இப்பகுதியிலேயே இனப்பெருக்கத்திற்கான சூழலை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

மழைக்காடை, சிற்றாலாவும் தொடர்ந்து தங்கியுள்ளன

வடஇந்தியாவை தாயகமாகக் கொண்ட மழைக்காடை பறவையும் வழக்கத்தை விட முன்கூட்டியே பண்ணவாடியில் காணப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பறவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை இங்கு தங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல், பொதுவாக கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும் சிற்றாலா பறவையும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து பண்ணவாடியில் வசித்து வருகிறது.

பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடம்

அரிய மற்றும் வலசைப் பறவைகள் நீண்ட காலம் தங்கி வாழ்வதற்கு தேவையான நீர்நிலைகள், போதுமான உணவு வளம் மற்றும் பாதுகாப்பான இயற்கைச் சூழல் ஆகியவை பண்ணவாடியில் இருப்பதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Previous Next

نموذج الاتصال