கங்கை - காவிரி நதிகள் இணைந்தால் தண்ணீர் பிரச்சினை தீரும்: சந்திரபாபு நாயுடு

 

விஜயவாடா: ஆந்திரப் பிரதேசத்தின் இப்ரஹிம்பட்டினம் அருகே கிருஷ்ணா - கோதாவரி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெற்ற புனித ஜல ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, நாட்டின் நீர்வள மேலாண்மை குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், 2027 மார்ச் மாதத்திற்குள் போலவரம் அணைத் திட்டத்தை நிறைவு செய்து நாட்டுக்கு அர்ப்பணிப்போம் என்றார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திர அரசின் நீர்வளத் திட்டங்களுக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் 35 நீர்நிலைத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


பென்னா மற்றும் வம்சதாரா நதிகளை இணைத்தால் ஆந்திரப் பிரதேசத்தில் வறட்சி பிரச்சினை பெருமளவில் குறையும் என்றும், அதேபோல் கங்கை மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் தேசிய அளவிலான திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


மேலும், இந்த திட்டம் விவசாய வளர்ச்சிக்கும் நீர்வள சமநிலைக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, குண்டூர் குடிநீர் கால்வாய் திட்டத்திற்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்றும், போலவரம் இடது கால்வாய் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அத்துடன், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அனகாபல்லியில் கோதாவரி நதிக்கு ஜல ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

Previous Next

نموذج الاتصال